×

செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாமல்லபுரம், மே 4: செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கார், வேன், அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகளில் அதிகளவில் வருகை தருகின்றனர். அப்படி, வரும் பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சில பயணிகள் புராதன சின்னங்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

மாமல்லபுரத்தில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த சர்வதேச 44வது சதுரங்க போட்டி, கடந்தாண்டு 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் தயாரித்த சவுண்டிங் ராக்கெட் ஏவியது, காத்தாடி திருவிழா, சர்வதேச அலைச்சறுக்குப் போட்டிகள் கோலாகலமாக நடந்தது. இதனால், உலக அளவில் மாமல்லபுரத்திற்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. மேற்கண்ட, போட்டிகளுக்கு பிறகு மாமல்லபுரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கோடை வெயில் தொடங்கி உள்ளதாலும், மாமல்லபுரத்துக்கு ஏராளமான பயணிகள் குடும்பத்தோடு வருகின்றனர்.

அப்படி, வருபவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்க கடலில் நீராடுகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் நகரத்து டவுன் பேருந்து, மாநகர பேருந்து என ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது குறைந்த அளவிலான பேருந்துகளையே காண முடிகிறது. குறிப்பாக, செங்கல்பட்டில் இருந்து தடம் எண் 508 என்ற 2 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

தாம்பரம், மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அந்த 2 பேருந்துகளில் முண்டியத்துக் கொண்டு ஏறி மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல், மாமல்லபுரத்தில் உள்ள பொதுமக்கள் பலர் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வேலை செல்வோரும் போதிய பேருந்துகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். மாமல்லபுரம் வரும் பயணிகளின் வசதிக்காக, போதிய அளவிலான பேருந்துகள் இயக்கப்படாததால் வீடு திரும்பி செல்ல முடியாமல் நீண்ட நேரம் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சில ஆண்டுகளாக மாமல்லபுரத்துக்கு மிக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, படிப்படியாக குறைந்து செங்கல்பட்டில் இருந்து 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த, 2 பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது இல்லை. அப்படி, வந்தாலும் 2 பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, வெற்றி பெற்ற பிறகு நடைமுறைபடுத்தியது. ஆனால், தடம் எண் 508 என்ற அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இலவசமாக பெண்களை ஏற்ற மறுக்கின்றனர்.

குறிப்பாக, பஸ் நிறுத்தங்களில் பெண்கள் நின்றிருந்தால் நடத்துனர் பேருந்தை நிறுத்த சொல்வதுமில்லை, ஓட்டுனரும் நிறுத்துவதில்லை. இதனால், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், நேரில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். சில நேரங்களில், புகார் தெரிவிக்க போன் மூலம் தொடர்பு கொண்டால் அதிகாரிகள் போனை எடுப்பதில்லை.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை மாவட்ட நிர்வாகமோ அல்லது போக்குவரத்துத் துறை நிர்வாகமோ கண்டும் காணாதது போல் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். செங்கல்பட்டில் இருந்து தடம் எண் 508 என்ற 2 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், தாம்பரம், மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அந்த 2 பேருந்துகளில் முண்டியத்துக் கொண்டு ஏறி மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல், மாமல்லபுரத்தில் உள்ள பொதுமக்கள் பலர் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வேலை செல்வோரும் போதிய பேருந்துகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில்...